சோல்: தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் படகு கவிழ்ந்ததால் அதில் சென்ற ஏழு மீட்பு ஊழியர்கள் காணாமல் போயினர்.
கொரியாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு நீண்டகாலம் நீடிக்கும் பருவ மழையால் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 44 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த நிலையில் சோலுக்கு வடகிழக்கில் உள்ள சுன்சியான் நகருக்கு அருகே அணைக்கட்டுப் பகுதியில் போலிஸ் படகு ஒன்று சிக்கிக்கொண்டது.
இதனை மீட்பதற்காக மீட்புப் படகு கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் வெள்ளத்தில் மூன்று மீட்புப் படகுகள் கவிழ்ந்ததில் ஏழு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
ஆனால் உயிர்ச்சேதம் ஏற் பட்டதா என்பது பற்றி தகவல் இல்லை.
கடந்த சில நாட்களில் வெள்ளத்தில் 16 பேர் மாண்டனர். மேலும் 11 பேர் காணாமல் போயினர். 1,600க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
சோலில் ஹான் ஆற்றின் கரை யோரமாக வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால் முக்கிய சாலைகள் மூடப்பட்டன.
புதன்கிழமை அன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் சுங் சியே-கியூன் பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர், பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பேரிடர் வட்டாரமாக அறிவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித் தார்.

