அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் தலைமையிலான புதிய அரசாங்கம் இலங்கையை வளப்படுத்த எடுக்கும் முயற்சியில் தாமும் பங்குபெற உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டின் முன்னைய அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அடுத்து நாடாளுமன்றம் செல்லும் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவ மாவட்டத்தில் 111, 000 வாக்குகளை வென்ற திரு சிறிசேன, இலங்கையை நாகரிமான சமுதாயமாக உருவாக்க புதிய அரசாங்கத்துடன் பாடுபடப்போவதாக உறுதி கூறினார். தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்காக செயலாற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகள், போலிசார் மற்றும் இதர அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்றிரவு தமது வெற்றியை அறிவித்தார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது கட்சியான இலங்கை பொதுஜன முன்னணி 225 நாடாளுமன்ற இடங்களில் 145 இடங்களை வென்றது.

