கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அேமாக வெற்றி பெற்றுள்ள மகிந்த ராஜபக்சே தலைமையிலான பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி பெரும் பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.
இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்த இடங்கள் 225. இதில் 29 இடங்கள் கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை பலம் பெறுவதற்கு 113 இடங்கள் இருந்தால் போதும்.
ஆனால் பொதுஜன பெரமுனா கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. அதாவது அக்கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று அைசக்க முடியாத பலத்துடன் திகழ்கிறது.
அதே சமயத்தில் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே படுதோல்வி அடைந்துள்ளார்.
அவரது கட்சி ஒரே ஒரு இடத்தை மட்டும் பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
சம்பந்தனின் இலங்கை தமிழரசுக் கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு மூன்று இடங்கள் கிடைத்துள்ளன.
வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்படும் 29 இடங்களில் 17 உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனா கட்சிக்கு கிடைத்துள்ளன.
ஏழு உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எங்கள் மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசிய பட்டியல் உறுப் பினர் இடம் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள மகிந்த ராஜபக்சேவை தொடர்புகொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது பற்றி மஹிந்த ராஜபக்சே வெளியிட்ட டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி உள்ளேன்," என்று கூறியுள்ளார்.
இரு நாடுகளும் நட்புடனும் நல்லுறவுடனும் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தேர்தலில் 1.6 கோடி வாக்காளர்களில் 75 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

