'அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் சகோதரர்களும் இடம்பெறுவார்கள்'

2 mins read
f0dd9a94-8835-457e-bc0c-33f38308782b
தங்காலை கால்டன் இல்லத்துக்கு தொடர்ந்து செல்லும் மக்கள் மஹிந்த ராஜபக்சேவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

கொழும்பு: இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் பெருவாரியான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சே இன்று 9வது நாடாளுமன்றத்தின் பிரதமராக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்.

களனி ராஜமகா விகாராவில் காலை 8.30 மணி அளவில் பதவி யேற்பு நிகழ்ச்சி தொடங்குகிறது.

ஆனால் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை அன்று பொறுப்பு ஏற்பார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

புதிய அரசாங்கத்தில் 26 முதல் 30 வரையிலான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் கொள்கைகளை அமலாக்க துணை அமைச்சர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கொள்கைகளை வகுப்பதிலும் முடிவு எடுப்பதிலும் அமைச்சரவை முக்கிய கவனம் செலுத்தும் என்றும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற புதன்கிழமை நடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

தேர்தல் வெற்றி பற்றி பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நாட்டு மக்கள் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை வழங்கி வருகின்றனர் என்றார்.

"அதிபர் தேர்தலின் வெற்றி பொதுத் தேர்தல் வெற்றி மூலம் முழுமை பெற்றுள்ளது.

"அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்தை பலமாக தோற்றுவித்த மக்களுக்கு பொதுஜன பெரமுனவின் செயலாளர் என்ற முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"புதிய அரசாங்கத்தில் தமிழ்-முஸ்லிம் என சகோதர இனத்தவர்களும் இடம்பெறுவார்கள். இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு போதும் அரசாங்கம் செயல்படாது.

"வடக்கு மாகாணத்தில் 'மொட்டு' சின்னம் தமிழ் மக்களின் ஆதரவுடன் வெற்றி கொண்டுள்ளது. தமிழ் மக்களின் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்," என்று சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்சேவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க அதிக அளவிலான மக்கள் தங்காலை கால்டன் இல்லத்துக்கு தொடர்ந்து சென்று வருகின்றனர். அவர்களை வரவேற்று திரு மகிந்த ராஜபக்சே வாழ்த்துகளை ஏற்று வருகிறார்.