கொவிட்-19 பாதிப்பு 20 மில்லியனைக் கடந்தது

கொவிட்-19 பாதிப்பு 20 மில்லியனைக் கடந்தது

2 mins read
dea518bd-c1a1-437e-acd7-56fd8ae8fb2c
கலிபோர்னியாவில் உள்ள கொவிட்-19 சோதனைக்கூடம் ஒன்றிற்கு வருகையளிக்கும் வாகனமோட்டிகளின் விவரங்களைப் பெறும் சுகாதாரத்துறை ஊழியர். படம்: ஏஎப்பி -

வாஷிங்டன்: சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலாக கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் கொரோனா கிருமித்தொற்று தெரியவந்தது.

கடந்த மார்ச் 6ஆம் தேதி 67ஆவது நாளில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது. அசுர வேகத்தில் பரவிய கொரோனா, 94 நாட்களில் 1 மில்லியன் பேரைப் பாதித்தது.

மே 20ல் 142 நாட்களை கடந்த நிலையில் கொரோனா கிருமி, ஐந்து மில்லியன் (50 லட்சம்) பேரைத் தொற்றி இருந்தது. ஜூன் 27ல் பாதிப்பு 10 மில்லியனை எட்டியபோது 180 நாட்கள் ஆயின.

இப்போது 224 நாட்களில் 20 மில்லியன் பேரை கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது.

நேற்றைய நிலவரப்படி மொத்தம் 20,267,512 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் சுமார் 5.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் சுமார் 3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.27 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ள இந்தியாவில், பாதிப்பு விகிதம் 11.07% ஆக உள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் உள்ளனர். நேற்று பிற்பகல் நிலவரப்படி உலகளவில் கொரோனாவால் 739,428பேர் உயிரிழந்தனர்.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 163,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவில் 53,000 பேர், பிரிட்டனில் 46,500 பேர் உயிரிழந்துள்ளனர். மரணத்தைப் பொறுத்தவரை இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 45,257 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் இறப்பு விகிதம் 5.42% ஆக உள்ள நிலையில், அமெரிக்காவில் 3.18% ஆகவும் பிரேசிலில் 3.33% இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2% ஆக இருக்கிறது.