சுடச் சுடச் செய்திகள்

அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டி; தாயார் சென்னையில் பிறந்தவர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளிப் பெண்ணான கமலா தேவி ஹாரிஸ், 55, அறிவிக்கப்பட்டுள்ளார்.

துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் ஆசிய அமெரிக்கரும் இவர்தான்.

இவ்வாண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் இப்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் களம் காண்கிறார்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக திருமதி கமலாவை தாம் முன்னிறுத்துவதாக திரு பைடன் அறிவித்துள்ளார்.

திருமதி கமலாவின் தாயார் திருமதி சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். அவருக்கும் ஜமைக்காவில் பிறந்த பொருளியல் பேராசிரியர் டோனல்ட் ஹாரிசுக்கும் மூத்த மகளாகப் பிறந்தார் திருமதி கமலா.

சட்டம் படித்தபின் வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், 2017ஆம் ஆண்டு முதல் கலிஃபோர்னியா மாநில செனட்டராக இருந்து வருகிறார்.

முன்னதாக, ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் திருமதி கமலாவும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

தமது இந்தியப் பாரம்பரியம் குறித்து தம் தாயார் மிகுந்த பெருமிதம் கொண்டிருந்ததாகவும் அதைத் தங்களுக்கும் கற்றுக்கொடுத்ததாகவும் திருமதி கமலா குறிப்பிட்டார்.

தம் தாயாரும் அவருடைய தந்தை பி.வி.கோபாலனும் தம் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என்றார் திருமதி கமலா. சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாத்தா கோபாலனுடன் நடந்து சென்ற பொழுதுகள் மறக்க முடியாதவை என்றும் இவர் சொன்னார்.

நண்பர்களுடன் சேர்ந்து அரசியல், ஊழல் எதிர்ப்பு, நீதி ஆகியவை குறித்து அவர் உரையாடுவார் என்றும் அதுவே சமூக பொறுப்புடனும் நேர்மையாகவும் இருக்க தமக்குக் கற்றுக்கொடுத்தன என்றும் திருமதி கமலா கூறினார்.

சிங்கப்பூரர்கள் சொல்கிறார்கள்...

இந்தியப் பெயரைத் தாங்கிய ஒருவர் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதே உற்சாகம் தருவதாக உள்ளது.

- அனிருத் ஸ்ரீவத்சன், 24

கறுப்பினத்தவராக திருமதி கமலாவை வகைப்படுத்துவது ஏற்புடையதாக இல்லை. அத்தகைய பாகுபாட்டை அவரும் சந்தித்து இருப்பார். அச்சமூகத்திற்கும் அவரால் குரல் கொடுக்க முடியும்.

-செந்தில் குமரன், 30

பெண்களுக்கு ஊக்கம் தரும் செய்தி இது.

- பொன்னி சிவகுமார், 24

நிச்சயம் புத்துணர்ச்சியூட்டக் கூடிய தகவல். ஆனால், இன, கலாசார அடையாளம் பிரசாரத்தின் அடிப்படையாக இருக்கக்கூடாது.

- அருண் வாசுதேவ் கிருஷ்ணன், 27

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon