முதல் கூட்டுப் பிரசாரத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் தாக்கு ‘டிரம்ப் நாட்டை சிதறடித்து விட்டார்’

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் அவருடன் துணை அதிபராக தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும் முதல் முறையாக இணைந்து மேற்கொண்ட கூட்டுப் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப்பை கடுமையாகத் தாக்கி பேசியுள்ளனர்.

“டிரம்ப் தகுதியற்ற தலைவர், அமெரிக்காவை அவர் சிதறடித்துவிட்டார்,” என்று இருவரும் சாடியுள்ளனர்.

திரு பைடன் தம்முடன் 2வது பொறுப்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை அறிமுகப்படுத்திய இரண்டாவது நாளே இந்தக் கூட்டுப் பிரசாரம் நடைபெற்றது.

இருவரும் டிரம்ப்பை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

இதற்கு பதிலடித் தந்துள்ள அதிபர் டிரம்ப், அதிபர் வேட்பாளராக போட்டியிடவிருந்த கமலா ஹாரிஸ், கீழே விழுந்த பாறாங்கல் மாதிரி காணாமல் போய்விட்டார் என்றார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து திரு பைடன் போட்டியிடுகிறார்.

டெலவரில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை. கிருமிப் பரவலைத் தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று 77 வயது ஜோ படைன் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிந்திருந்த செய்தியாளர்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தனர். பின்னர் அங்கு வந்த இரு வேட்பாளர்களும் முகக்கவசத்துடன் மேடையேறி பேசினர்.

இதற்கிடையே வெளியே கூடிய பொதுமக்களில் சிலர் உள்ளே அனுமதிக்கப்படாததற்கு ஜோ பைடனை குறை கூறினர்.

“வரும் நவம்பர் மாதம் நாம் எடுக்கும் முடிவு நீண்டகாலத்திற்கு அமெரிக்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கவிருக்கிறது,” என்று திரு ஜோ பைடன் கூறினார்.

பின்னர் பேசிய கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் வாக்களித்த மக்களை பற்றி கவலைப்படாமல் தன்னைப் பற்றியே அக்கறை செலுத்து கிறார் என்று கூறினார்.

இதற்கிடையே துணை அதிபர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சிக்கு வலு சேர்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பத்து பேரில் ஏறக்குறைய ஒன்பது பேர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடனைவிட அவர் பெண்களிடையே புகழ்பெற்று விளங்குகிறார். பெண்கள், இளம் வாக்காளர்கள், குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்களைக்கூட ஈர்த்து ஜோ பைடனுக்கு 55 வயது கமலா ஹாரிஸ் உதவுவார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

முதல் கறுப்பின பெண்ணும் ஆசிய அமெரிக்கருமான கமலா துணை அதிபராக போட்டியிடுவது அமெரிக்க வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றும் குறிப்பிடப்படுகிறது. திருமதி கமலா ஹாரிஸ், இந்தியாவின் சென்னை நகரில் பிறந்த தாய்க்கும் ஜமைக்காவில் பிறந்த தந்தைக்கும் பிறந்த மகள் ஆவார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon