22 ஆண்டுகளில் இல்லாத பொருளியல் சரிவைச் சந்தித்த மலேசியா

22 ஆண்டுகளில் இல்லாத பொருளியல் சரிவைச் சந்தித்த மலேசியா

2 mins read
1a513cec-4986-4fbf-8267-cd2e102ade31
படம்: ராய்ட்டர்ஸ் / லிம் ஹுயே தெங் -

இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 17.1% சுருங்கியதாக அந்நாட்டின் தேசிய வங்கியும் புள்ளிவிவரத் துறையும் நேற்று தெரிவித்தன.

கடந்த 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின் மலேசியா சந்தித்துள்ள ஆக மோசமான பொருளியல் சரிவு இதுதான். 1998ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2% கீழிறங்கியது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக இருந்த ஏப்ரல் மாதத்தில்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆக அதிகமாக 28.6% சரிந்தது. அதனை அடுத்த மே மாதத்தில் சரிவு 19.5 விழுக்காடாகவும் ஜூன் மாதத்தில் 3.2 விழுக்காடாகவும் இருந்தது.

"உள்நாட்டிலும் உலகளவிலும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்திய எதிர்பாராத தாக்கத்தை இந்தச் சரிவு வெளிப்படுத்துகின்றது," என்று மலேசிய தேசிய வங்கி தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

வரம்புக்குட்பட்ட உற்பத்தி, பயனீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசியா கடந்த மார்ச் 18ஆம் தேதி பிறப்பித்தது.

மே மாதம் முதல் பொருளியல் நடவடிக்கைகளைப் படிப்படியாகத் தொடங்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என தேசிய வங்கி எதிர்பார்க்கிறது.

பொருளியல் வளர்ச்சி இந்த ஆண்டில் -3.5% முதல் -5.5% வரை இருக்கும் என்றும் அடுத்த ஆண்டில் 5.5% முதல் 8% வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் காலாண்டில் 3.5 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் இரண்டாம் காலாண்டில் 5.1 விழுக்காடாக அதிகரித்தது. ஆயினும், பொருளியல் மீளும்போது அந்நிலையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரம்பை நீக்க முடிவு

இதற்கிடையே, ஆள்சேர்ப்பில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரம்பை அகற்ற மலேசியா முடிவு செய்துள்ளது. ஆயினும், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் பட்சத்தில் அவர்கள் முன்னர் வேலை செய்த துறையிலேயே பணியமர்த்தப்பட வேண்டும்.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில், சென்ற மாதம் கட்டுமானம், வேளாண்மை, தோட்டமிடுதல் ஆகிய துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களைச் சேர்ப்பதற்கான வரம்பை மலேசிய மனிதவள அமைச்சு அறிவித்தது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 67,000க்கும் மேற்பட்ட மலேசியர்களும் 4,700 வெளிநாட்டு ஊழியர்களும் வேலை இழந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.