தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம்

பத்தாண்டுகளில் கூடுதலாக 4,000 மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம்

சோல்: தென்கொரியாவில் கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமாக நேற்று ஒரே நாளில் 103 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

இதையடுத்து, தென்கொரியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,873ஆக உயர்ந்தது. அதன் காரணமாக அங்கு இதுவரை 305 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில், புதிய மருத்துவர்களுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அந்நாட்டு மருத்துவர்கள் நேற்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோய்ப் பரவல் போன்ற பொதுச் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள சிறந்த முறையில் ஆயத்தமாகி இருக்கவேண்டியது அவசியம் என்பதால் அடுத்த பத்தாண்டுகளில் கூடுதலாக 4,000 மருத்துவர்களை உருவாக்க தென்கொரிய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

ஆனால், நாட்டில் ஏற்கெனவே தேவைக்கு அதிகமான மருத்துவர்கள் இருப்பதால் அரசாங்கம் தனது திட்டத்தைக் கைவிட வேண்டும் என கொரிய மருத்துவச் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

அத்துடன், அங்குள்ள மருந்தகங்களில் நான்கில் ஒரு பங்கு மருந்தகங்கள் நேற்று ஒருநாள் மட்டும் தமது கதவுகளை மூடி, எதிர்ப்பைத் தெரிவித்தன.

நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் பயிற்சி மருத்துவர்களும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரிய மருத்துவச் சங்கம் இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தது.

“கடந்த பத்து ஆண்டுகளில் ஆயிரம் பேருக்கான மருத்துவர்களின் விகிதம் 3.1% கூடிவிட்டது. இது பொருளியல் ஒத்துழைப்பு, வளர்ச்சி நிறுவனத்தின் சராசரியைக் காட்டிலும் ஆறு மடங்கு அதிகம்,” என்று கொரிய மருத்துவச் சங்கம் ஓர் அறிக்கை வாயிலாகக் குறிப்பிடத்து.

இதனிடையே, புதிய கொரோனா தொற்றுக் குழுமங்களாக தேவாலயங்களும் உணவகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கடுமையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon