கோலாலம்பூர்: மலேசியாவின் ஆளும் கட்சியான பெர்சத்து, முஃபாகத் நேஷனல் கூட்டணியில் (எம்என்) முறைப்படி சேர்ந்துகொள்ளும் என்று பிரதமர் முகைதீன் யாசின் அறிவித்து இருக்கிறார்.
அந்தக் கூட்டணியில் நாட்டின் ஆகப் பெரிய மலாய் முஸ்லிம் கட்சி களான அம்னோவும் பாஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளன.
ஆளும் பெர்சத்து கட்சியின் தலைவரான முகைதீன், கட்சி உறுப்பினர்களிடையே பேசினார். முஃபாகத் நேஷனல் கூட்டணியில் தன்னுடைய கட்சி சேர்வதற்கான ஏற்பாடுகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
முஃபாகத் நேஷனல் அணியில் சேர்வதுதான் ஆளும் பெர்சத்து கட்சியைப் பொறுத்தவரையில் தலை சிறந்ததாக இருக்கும் என்று தான் நம்புவதாக முகைதீன் குறிப்பிட்டார். இந்தக் கூட்டணியை 2018ல் அம்னோவும் பாஸ் கட்சியும் சேர்ந்து உருவாக்கின.
அம்னோ, பாஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து இருப்பதால் பெரும்பாலான மக்களின் ஆதரவு நமக்கு இருக்கும் என்று நம்புவதாகவும் நேற்று முகைதீன் குறிப்பிட்டார். நாட்டில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட இந்த ஏற்பாடு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளும் தேசிய கூட்டணியில் ( பிஎன்) முறையாகச் சேர்ந்துகொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதற்குப் பதிலாக முஃபாகத் நேஷனல் அணியை பலப்படுத்துவதையே தான் விரும்புவதாகவும் அம்னோ அறிவித்தது.
இதற்கு சில வாரங்கள் கழித்து பிரதமர் முகைதீனின் அறிவிப்பு இப்போது இடம்பெறுகிறது.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது புதிதாக கட்சி ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்.
பெர்சத்து கட்சியில் இருந்த பலரும் மகாதீர் கட்சிக்குத் தாவி இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரதமரின் அறிவிப்பு இடம்பெறுகிறது. டாக்டர் மகாதீர், 95, திரு முகைதீனுடன் சேர்ந்து 2016ல் பெர்சத்து கட்சியை ஏற்படுத்தினார்.
ஆனால் சென்ற பிப்ரவரியில் பிரதமர் பதவியில் இருந்து டாக்டர் மகாதீர் விலகியதைத் தொடர்ந்து பெர்சாத்து உடைந்தது.
டாக்டர் மகாதீர் தலைமையில் ஆட்சி புரிந்த பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து திரு முகைதீன் தலைமையிலான பெர்சாத்து அணி விலகி அம்னோ, பாஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய தேசிய கூட்டணி (பிஎன்) அரசை அமைத்தது.
இப்படி கட்சி மாறுவதை டாக்டர் மகாதீர் ஏற்கவில்லை. பிறகு பெர்சத்துவில் இருந்து டாக்டர் மகாதீரும் அவருக்கு ஆதரவான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, டாக்டர் மகாதீர் எற்படுத்தி இருக்கும் புதிய கட்சி, பேராக்கில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் முதன்முதலாக களம் காணுகிறது என்று ஊடகத் தகவல்நேற்று தெரிவித்தன.
அந்த மாநில சட்டமன்றத்திற்கான சிலிம் தொகுதி இடைத்தேர்தலில், அம்னோ வேட்பாளருக்கும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேருக்கும் இடையில் மும்முனைப் போட்டி இருக்கும்.
சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான இஸ்லாமிய வழக்கறிஞர் அமிர் குஷ்யாய்ரி முகம்மது தனுசி, 38, என்பவர் டாக்டர் மகாதீரின் கட்சியைப் பிரதிநிதிப்பார்.
இருந்தாலும் டாக்டர் மகாதீரின் கட்சி இன்னமும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பதால் அவர் சுயேச்சையாகப் போட்டியிடுவார்.
அம்னோ வேட்பாளரான முகம்மது அஜிஸ், 43, தேசிய கூட்டணி சார்பில் களம் காண்பார். முன்னாள் ஆசிரியரான எஸ். சந்திரசேகரன், 45, மற்றொரு சுயேச்சை வேட்பாளராக அந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவார்.
இடைத்தேர்தல் 14 நாள் பிரசாரத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடக்கிறது.

