வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அந்த நாடு இப்போது தேர்தலையொட்டி ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி மாநாடுகளுக்குத் தயாராகி வருகிறது. கொவிட்-19 காரணமாக கட்சி மாநாடுகள் எல்லாம் மிகவும் சுருங்கிவிட்டன.
சமூகப் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுவதால் மெய்நிகர் கூட்டங்களை நடத்த கட்சிகள் தயாராகின்றன.
ஜனநாயகக் கட்சி மாநாடுகள் நாளை முதல் வரும் 20ஆம் தேதி வரை நடக்கின்றன. அதில் நேரடியாக கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு பெரும்பாலும் மெய்நிகர் ரீதியிலேயே இருக்கும் என்று தெரிகிறது. மாநாட்டில் ஒவ்வொரு நாளும் தலைவர்கள் சுமார் 2 மணி நேரம் உரையாற்றுவார்கள்.
ஜனநாயக் கட்சி களமிறக்க இருக்கும் ஜோ பைடனும் அந்தக் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட விழையும் கமலா ஹாரிசும் பெரும் திரையில் தோன்றி உரையாற்றுவார்கள். டெலாவர் மாநிலத்தில் மாநாட்டு மையம் ஒன்றில் இருந்து அவர்கள் உரையாற்றுவார்கள்.
அமெரிக்க தேர்தலில் கட்சிகள் நடத்தும் தேசிய மாநாடு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாநாட்டில்தான் வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
வரும் வியாழக்கிழமை நடக்கும் ஜனநாயகக் கட்சியின் தேசிய கூட்டத்தில், ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இக்கட்சி வேட்பாளராக போட்டியிட அதிகாரபூர்வமாக இணக்கம் தெரிவிப்பார்.
அதேபோல கமலா ஹாரிஸ் துணை அதிபர் தேர்தல் வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஆகஸ்ட் 24 முதல் 27ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டிற்கான செயல்திட்டங்கள் இன்னமும் பூர்த்தியாகவில்லை. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக இப்போதைய அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 24ஆம் தேதி முறையாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியிடப்போவதாக இணக்கம் தெரிவித்து வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றப் போவதாக அதிபர் டிரம்ப் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டார்.
இதனிடையே, ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள ஜோ பைடனையும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட விழையும் கமலா ஹாரிஸ் இருவரையும் அதிபர் டிரம்ப் தாக்கிப் பேசினார்.
கமலா ஹாரிசைவிட தனக்கு இந்தியர்களின் ஆதரவு அதிகம் என்று குறிப்பிட்ட டிரம்ப், கமலா ஹாரிஸ் தனக்கு ஒரு மிரட்டலாக இருக்கமாட்டார் என்றார்.
பைடன், கமலா ஹாரிஸ் இருவரும் வென்றால் அமெரிக்காவின் போலிஸ் துறையை நசுக்குவதற்குத் தோதாக சட்டம் இயற்றி விடுவார்கள் என்று எச்சரித்தார்.
அதேவேளையில், அமெரிக்க அதிபரை ஜனநாயகக் கட்சியினர் கடுமைாகக் குறைகூறி வருகிறார் கள். இனவெறிக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. கொவிட்- 19 மிரட்டலைச் சமாளிப்பதில் சரிவர செயல்படவில்லை என்று அதிபரை அவர்கள் சாடினர்.
அமெரிக்காவில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிபர் தவறியதால் கொவிட்-19 பாதிப்பு மிக அதிகமாக கூடிவிட்டதாக ஜனநாயகக் கட்சியினர் கூறி வருகிறார்கள். ஆனால் கிருமித்தொற்றைத் தடுக்க தன் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளை அதிபர் தற்காத்து வருகிறார்.

