மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று வீரியமிக்க புதிய வகையாக மாறியிருப்பதை சில பரிசோதனை மாதிரிகள் உணர்த்துவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதன்முதலில் சீனாவின் வூஹானில் உருவானதைக் காட்டிலும் அச்சுறுத்தல் மிகுந்ததாக கிருமி உருவெடுத்திருப்பதாகத் தெரிய வந்தள்ளதால் நாடு முழுவதும் உள்ள மக்கள் அதிக விழிப்புடன் இருக்குமாறு சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
சிவகங்கை, உலு திராம் ஆகிய இரு கிருமித்தொற்று குழுமங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் D614G என்னும் புது வடிவத்துக்கு கிருமி மாற்றம் அடைந்திருப்பதை மலேசிய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கண்டு பிடித்து இருப்பதாக நேற்று தமது ஃபேஸ்புக் மூலம் வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
மாற்றம் கண்டுள்ள இந்தக் கிருமி இப்போது பரவுவதைக் காட்டிலும் பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. மேலும் கிருமியால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மிக எளிதில் மற்றவருக்குத் தொற்றக்கூடியது என்று அவர் விளக்கி உள்ளார்.
இந்த அளவுக்கு வீரியமிக்கதாக உருமாற்றம் அடைந்திருக்கும் கிருமியின் உறுதியான நில வரம் இனிமேல் வெளியிடப்படும் என்றும் தற்போது அதன் மீதான ஆரம்பக்கட்ட பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வகை கிருமி அது உருவான குழுமங்களில் இருந்து பரவாத வண்ணம் மலேசிய பொது சுகாதார அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு கட்டுப்படுத்தி இருப்பதாகவும் திரு ஹிஷாம் குறிப்பிட்டார். இதைப்ேபான்ற எல்லா வகைக் கிருமித்தொற்றும் பரவாதபடி தடுக்கும் முயற்சிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பிய அந்நாட்டின் நிரந்தரவாசியான 57 வயது ஆடவரிடமிருந்து பலருக்குக் கிருமி பரவியதைக் குறிப்பதே சிவகங்கை கிருமிக் குழுமம்.

