ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் கொவிட்-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், அம்மாநிலத்தின் சில பகுதிகளில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படவிருக்கின்றன.
பினாங்கில் 100 நாட்களுக்கு மேல் கொவிட்-19 சம்பவங்கள் இல்லாத போக்கு நிலவி வந்த வேளையில், சமூகத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் தலையெடுத்திருப்பதால் உள்ளூர் சுகாதார அமைப்புகளும் நகர மன்றங்களும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாட்டுகளைக் கடுமையாக்கிஉள்ளன.
சாலையோரத்தில் உள்ள கடைகளில் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படாது. வாடிக்கையாளர்கள் உணவைப் பொட்டலம் கட்டி எடுத்துச் சொல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
உணவகங்களும் காப்பிக் கடைகளும் நடப்பில் உள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால் அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவுண்ணலாம்.
கும்பலாக ஒன்று சேர்வதும் தடை செய்யப்படும்.
பினாங்கு தீவின் தெற்கில் உள்ள தெலுக் கும்பார், சுங்கை பத்து, கெர்தாக் சங்குல் ஆகிய இடங்களிலும் பினாங்கு பெருநிலத்தில் உள்ள மத்திய மற்றும் தெற்கு செபராங் பிறை ஆகிய வட்டாரங்களிலும் இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுக் கும்பாரில் உள்ள தாமான் சஹாபாட்டில் நடத்தப்படும் இரவுச் சந்தையும் இப்போதைக்கு மூடப்படுகிறது என்றும் காலையில் செயல்படும் சந்தையில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் அதுவும் மூடப்படும் என்றும் பினாங்கு தீவின் நகர மன்றம் எச்சரித்துள்ளது.
தாமான் சஹாபாட்டில் வசிக்கும் 58 வயது பெண் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அந்தப் பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது என்றும் ஒருசில கடைகளே அங்கு திறந்துள்ளன என்றபோதிலும் அங்கு ஆள்நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

