பேங்காக்: அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நேற்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பதற்றம் நிலவியது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற எதிர்ப்புப் பேரணி நாடு மாற்றம் காணவேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது. பிரதமர் பிரயுத் சான் ஓ சா தலைமையிலான அரசாங்கம் உடனடியாக விலக வேண்டும், அரசியலமைப்புச் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அரசாங்க எதிர்ப்பாளர்கள் துன்புறுத்தப்படுவது கைவிடப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பிரதமர் பிரயுத் சான் ஓ சா இதற்கு முன்னர் ராணுவத் தளபதியாக இருந்தவர். ஆறாண்டுகளுக்கு முன்னர் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இன்றுவரை ஆட்சியில் இருந்து வருகிறார். அவர் பதவி விலகி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரி தாய்லாந்தில் அவ்வப்போது ஆர்ப்பட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கடந்த மாதம் கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்ததாக ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
ஜனநாயக ஆதரவு இயக்கத்தை வழிநடத்திய பிரபல மாணவர் தலைவர் பாரிட் சிவாராக், வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இருப்பினும் மறுநாளே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். பேங்காக்கில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவரும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
பிணையில் விடுவிக்கப்பட்டபோது காவல் நிலையத்தில் வெளியில் திரண்டிருந்த தமது ஆதரவாளர்களை நோக்கி, "உங்களை ஏமாற்ற மாட்டோம்," என்று அவர் குரல் எழுப்பினார்.
ஏராளமானோர் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான போலிசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக் குழுவினருக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை என்றும் தலைமை இல்லாத போராட்டம் என்றும் இச்சம்பவத்தை ஊடகங்கள் விமர்சித்தன.
ஹாங்காங் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தாய்லாந்து மாணவர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாகவும் முழுக்க முழுக்க சமூக ஊடகங்களை நம்பி அவர்களின் அரசாங்க எதிர்ப்பு செயல்கள் தொடருவதாகவும் அவை குறிப்பிட்டன.
'சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்டுங்கள்' என்றும் 'ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் நண்பர்களையும் அழையுங்கள்' என்றும் பொருள்படும் 'ஹேஷ்டேக்'குகள் நேற்று காலை முதலே டுவிட்டரில் வேகமாகப் பரவி பகிர்ந்துகொள்ளப்பட்டன.
கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்புப் பேரணியில் 4,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

