அமெரிக்க துணையதிபருக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு வாழ்த்து கூறும் தமிழக சுவரொட்டி ஒன்றின் புகைப்படத்தை அவரது தங்கை மகள் மீனா ஹாரிஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
35 வயது வழக்கறிஞர் மீனா, தமது பெரியம்மாவைப் பற்றிய சுவரொட்டி தமிழகத்திலிருந்து தமக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.
"பைங்காநாடு துளசேந்திரபுரத்தைச் சேர்ந்த பி.வி. கோபாலன் அவர்களின் பேத்தி கமலா ஹாரிஸ் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்," என்று அந்தச் சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது. அரசாங்க ஊழியராகப் பணியாற்றிய திரு கோபாலனின் மகள் ஷாமளா கோபாலன், கமலா ஹாரிஸின் தாய் ஆவார்.
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய திருவாட்டி ஹாரிஸ், சிறுமியாக இருந்தபோது இந்தியாவில் வாழ்ந்த தமது தாத்தாவுடன் உரையாடியதை நினைவுகூர்ந்தார்.
சென்னையில் தாத்தாவுடன் காலையில் நடந்து செல்லும்போது இந்தியாவை உருவாக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி பேசுவதாகத் தெரிவித்தார். "இவர் கற்றுத்தந்த பாடங்கள்தான் என் இன்றைய நிலைக்குக் காரணம்," என்று கூறினார் திருவாட்டி ஹாரிஸ்.
55 வயது திருவாட்டி கமலா, அமெரிக்கத் துணையதிபர் பதவிக்குப் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவராவார். அவரது தந்தை டோனல்ட் ஹாரிஸ், ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்.

