ஆக்லாந்து: நியூசிலாந்து கிருமித்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், அந்நாட்டில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவித்துள்ளார்.
102 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சென்ற வாரம் மீண்டும் கிருமித்தொற்று பதிவானது.
இதையடுத்து ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆக்லாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. வர்த்தகங்கள் முடங்கின. ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
கொரோனா பெருந்தொற்று அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டில் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தைக் கைவிட்டன. இதையடுத்து, தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.
120 உறுப்பினர்களைக் கொண்ட நியூசிலாந்து பொதுத் தேர்தலில், கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் ஆக்லாந்தில் தொடங்கியுள்ள கிருமித்தொற்றின் இரண்டாவது அலை, ஜெசிந்தாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, நியூசிலாந்தில் நேற்று 9 கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

