சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நிறுத்தப்பட்ட ரூபி பிரின்சஸ் கப்பலில் இருந்து இறங்கியவர்களால் கிருமித்தொற்று பரவியதைத் தடுக்க தவறியதற்காக நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
ரூபி பிரின்சஸ் சொகுசுக் கப்பல் பயணிகள் மூலம் ஆஸ்திரேலியாவில் கிருமி பரவியது தொடர்பிலான பொது விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது.
அதில் கப்பலில் இருந்த உடல்நலம் குன்றிய 120 பேர் உட்பட சுமார் 2,700 பயணிகளை மாநிலத்திற்குள் அனுமதித்தபோது அதிகாரிகள் 'மன்னிக்க முடியாத' தவறுகளைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
கப்பல் பயணிகள் தொடர்பில் 914 கிருமித்தொற்று சம்பவங்களும் 28 மரணங்களும் பதிவானதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கப்பல் பயணியால் கிருமித்தொற்றுக்கு ஆளான 62 பேரிடம் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் மன்னிப்பு கேட்டார்.
சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய பெரெஜிக்லியன், "சிலரின் தவறுகளால் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மனநிலைமையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தவறு செய்த அனைவரின் சார்பாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
கப்பல் பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதையோ அல்லது உடல்நலம் குன்றிய பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவோ, நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அதிகாரிகள் தவறிவிட்டது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே, விக்டோரியா மாநிலத்தில் நேற்று ஆக அதிகமாக 25 பேர் மாண்டனர். ஆனால் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள் இருக்கிறது.

