'சில இடங்களில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மோசமாக உள்ளது'

'சில இடங்களில் கொரோனா தொற்று இரண்டாம் அலை மோசமாக உள்ளது'

2 mins read
596d301e-a027-47ff-a972-1e63f8fb096f
ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொற்றுநோய் பரவலின் தொடக்க மாதங்களில், கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து முயற்சி எடுத்தன. ஆனால், இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கிருமிப் பரவலை எதிர்த்துப் போராடுகின்றன. படம்: ஏஎஃப்பி -

பொருளியலைச் சீர்குலைத்து, 770,00க்கும் அதிகமான மக்களின் உயிரைக் குடித்ததுடன், கிட்டத்தட்ட 22 மில்லியன் பேரைப் பாதித்துள்ள கொவிட்-19 கிருமிக்கு தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்காக நிறுவனங்கள் போட்டியிடும் வேளையில், புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் அதிகரிப்பு, சில நாடுகளை மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தூண்டியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது.

வியட்நாம் உட்பட கிருமிப் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தோன்றிய நாடுகளில் மீண்டும் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அண்மைக் காலம் வரையில் அங்கு மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு கிருமித்தொற்று இல்லாமல் இருந்தது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவலை தொடக்கத்தில் கட்டுப்படுத்திய நாடுகளில் அண்மையில் மீண்டும் தொற்று பரவியுள்ளது. இது ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் கிருமித் தொற்று ஒரு புதிய கட்டத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது.

எனினும் நாடுகள் அதற்கு சிறந்த வகையில் தயாராக உள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரியான டாக்டர் கசாய் குறிப்பிட்டார்.

"இந்தப் புதிய கட்டத்தில் நாடுகள் மக்களின் வாழ்க்கைக்கும் பொருளாதாரத்துக்கும் பெரிய அளவிலான இடையூறுகளைக் குறைக்க முடிகிறது," என்றார் அவர்.

ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொற்றுநோய் பரவலின் தொடக்க மாதங்களில், கிருமிப் பரவலை கட்டுக்குள் கொண்டுவர விரைந்து முயற்சி எடுத்தன. ஆனால், இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள கிருமிப் பரவலை எதிர்த்துப் போராடுகின்றன.

சில இடங்களில், இரண்டாவது அலை, தொடக்ககாலத்தை விட மோசமாக உள்ளது என்று டாக்டர் கசாய் கூறினார்.

நாடுகள் தங்கள் பொருளியலை மீண்டும் திறப்பதற்காக முந்தைய கடுமையான நடவடிக்கைகளை தளர்த்தியதால் கிருமிப் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டினார்.

இந்த நாடுகள் "பல மடங்கு தொற்றை சமாளிக்க வேண்டியிருக்கும், ஆனால் தாக்குப்பிடிக்கக்கூடிய முறையில்" என்று அவர் கூறினார்.

"பொருளியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் பெரிய இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்நாடுகள், முன்பைப் போன்று இலக்குடன் செயல்பட வேண்டும் என அவர் சொன்னார்.

இந்நாடுகள் தொடர்ந்து தங்கள் சுகாதாரப் பாதுகாப்பு முறையை மேம்படுத்த வேண்டும், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த நாடுகளில் வசிப்போர் கிருமி பரவும் அபாயத்தைக் குறைப்பதுடன், தங்களை பாதுகாத்துக்கொள்வதுடன் தங்களது குடும்பம், சமூகங்களையும் பாதுகாக்கவும் தொடர்ந்து சுகாதார பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.மேலும் வர்த்தகங்கள் செயல்படுவதற்கான வழிகளையும் கண்டறிய வேண்டும் என்று டாக்டர் கசாய் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்றை நிர்வகிப்பதற்கான ஆரம்பகால கண்டறிதல் நடவடிக்கை மூலம் நாடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பொருளியலுக்கும் ஏற்படும் இடையூறுகளை குறைக்க முடியும் என்று அவர் கூறினார். கிருமிப் பெருக்கம் இருந்தாலும், கொரோனா கிருமி "ஒப்பீட்டளவில் நிலைப்பட்டிருக்கிறது" என்று சுகாதார நிறுவனம் கருதுகிறது.

தடுப்பூசியை உருவாக்கும்போது தேவையான அனைத்து ஆய்வுகளையும் மேம்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு மருந்து தயாரிப்பாளர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்