சோல்: தென்கொரியாவில் கொரோனா கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. அங்கு தொடர்ந்து ஐந்து நாட்களாக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூன்று இலக்க எண்ணில் பதிவாகி வருகின்றன.
தென்கொரியாவில் நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 246 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.
கடந்த வார இறுதியில் தலைநகர் சோலில் சமூக இடைவெளி நடைமுறைகள் மறுபடியும் அமல்படுத்தப்பட்டன.
கொரோனா கிருமிப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அவ்வப்போது அதிகரித்து வருகின்றன. அந்நாட்டில் இதுவரை 15,700க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். கிருமித்தொற்றால் 306 பேர் உயிர் இழந்தனர்.
நேற்று நிலவரப்படி குறைந்தது 383 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் சராங் ஜெய்ல் தேவாலயத்துடன் தொடர்புடையவை. அவர்களில் 10 பேர் கடந்த இரு வாரயிறுதிகளில் சோல் நகரில் நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றது உறுதிப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு துணை சுகாதார அமைச்சர் கிம் காங் லிப் தெரிவித்தார்.
தேவாலயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோரின் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கிருமி தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைத் தனிமைப்படுத்தி அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக திரு கிம் சொன்னார்.
இதற்கிடையே, ராணுவத்தில் இருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தென்கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது. ராணுவத் தளங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88ஆக உள்ளது.
ராணுவ அதிகாரிகள் 461 பேர் அவரவர் இருக்கும் ராணுவத் தளங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்கொரிய பிரதமர் சுங் சாய் கியுன் நேற்று அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினார். கிருமிப் பரவலை முறியடிக்கும் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து அமைச்சர்களுடன் திரு சுங் கலந்தாலோசித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

