செய்திக்கொத்து (19-8-2020) உலகம்

2 mins read
a562ac21-728b-4a1c-bfd5-f422aa906c95
பிலிப்பீன்ஸில் அரசாங்கம் கொவிட்-19 சோதனையை முடுக்கிவிட்டுள்ளது. மணிலாவின் கலூக்கன் பகுதியில் உள்ள ஒரு கொவிட்-19 சோதனைக்கூடத்திற்கு வெளியே சோதனைக்காக காத்திருக்கின்றனர் இவர்கள். படம்: ராய்ட்டர்ஸ், லோப்பெஸ் -

பிலிப்பீன்சில் 4,836 பேருக்குத் தொற்று

மணிலா: பிலிப்பீன்சில் நேற்று மேலும் 4,836 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் தொடர்ந்து ஏழு நாட்களாக நாள் ஒன்றுக்கு 3,000க்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலிப்பீன்சில் இதுவரை மொத்தம் 169,213 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கிருமித்தொற்றால் நேற்று மேலும் எழுவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,687. தென்கிழக்காசியாவிலேயே கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு பிலிப்பீன்ஸ்.

பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, பொருளியலை மீட்டெடுக்க தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் நடப்பில் இருந்த கடுமையான முடக்கநிலையை நேற்று முன்தினம் தளர்த்தினார்.

இந்தோனீசியாவில் மேலும் 1,673 பேருக்குத் தொற்று; 70 பேர் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று மேலும் 1,673 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களைச் சேர்த்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143,043ஆக உள்ளது. கிருமித்தொற்றால் மேலும் 70 பேர் மரணமடைந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,277ஆக உள்ளது.

மத்திய பிலிப்பீன்சில் நிலநடுக்கம்

மணிலா: மத்திய பிலிப்பீன்சில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6ஆக அது பதிவானது. நிலநடுக்கத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் 45 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டடங்களும் சாலைகளும் சேதமடைந்தன.

காஸாவில் குண்டுவீச்சு தாக்குதல்

காஸா: பாலஸ்தீனம், காஸா நகரில் நேற்று அதிகாலை இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. பதற்றம் நிறைந்த அந்த வட்டாரத்தில் அமைதியை ஏற்படுத்த எகிப்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திவரும் வேளையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

"போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் காஸா கரையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்குச் சொந்தமான நிலத்தடி உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது," என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.