ஆப்கானிஸ்தானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எறிபடை தாக்குதல்; பலர் காயம்

ஆப்கானிஸ்தானில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எறிபடை தாக்குதல்; பலர் காயம்

1 mins read
e14c227b-8d4a-4dfd-88b8-1e3a8dcf8b60
தலைநகர் காபுலில் வாகனம் ஒன்றைப் பரிசோதிக்கும் போலிஸ் அதிகாரிகள். இந்த வாகனத்திலிருந்து எறிபடை பாய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று எறிபடைகள் பாய்ச்சி தாக்குதல் நடத்தப்பட்டதில் குடிமக்கள் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானின் 101வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எறிபடை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது.

இரு வாகனங்களிலிருந்து 14 எறிபடைகள் ஏவப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளர் தாரிக் ஆரியான் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

"காபுலில் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து இந்த எறிபடைகள் ஏவப்பட்டன. நான்கு பிள்ளைகள், ஒரு மாது உட்பட 10 பேர் இதில் காயமடைந்தனர்," என்றார் அவர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி, அதிபர் மாளிகையில் சுதந்திர தின சடங்கில் பங்கேற்றதைத் தொடர்ந்து எறிபடை தாக்குதல் நடத்தப்பட்டது.

எறிபடைகளில் சில அதிபர் மாளிகைக்கு அருகே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

தூதரகங்கள் இருந்த பகுதியில் எறிபடைகள் தாக்கப்பட்டன. அந்தப் பகுதியில் ஏற்கெனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எறிபடை தாக்குதலுக்கு எந்த அமைப்பு காரணம் என்று தெளிவாகத் தெரியவில்லை.