வெலிங்டன்: நியூசிலாந்தில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் வெகுவாக அதிகரித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கருத்து கூறியதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் பதிலடி தந்துள்ளார். திரு டிரம்ப் கூறிய கருத்து தவறானது என்று அவர் சொன்னார்.
முன்னதாக, நியூசிலாந்து கிருமிப் பரவலை வெற்றிகரமாக தடுத்திருந்தது. ஆனால், அந்நாட்டில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள கிருமித்தொற்று மோசமான நிலையை எட்டியுள்ளதாக திரு டிரம்ப் கருத்துரைத்தார்.
நியூசிலாந்தில் நேற்று 13 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்நாட்டில் கிருமி பரவத் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 1,293 பேர் பாதிக்கப்பட்டனர். கிருமித்தொற்றால் 22 பேர் மரணமடைந்தனர்.
ஒப்புநோக்க, உலகிலேயே கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் 5.2 மில்லியனுக்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்றால் 170,000 பேர் உயிரிழந்துவிட்டனர்.
"நியூசிலாந்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தீர்களா? கிருமித்தொற்றை ஒழித்துவிட்டதாக பெருமையுடன் கூறினர். ஆனால், இப்போது தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. அந்த நிலை நமக்கு இங்கு வேண்டாம்," என்று அமெரிக்காவின் மினிசோட்டா மாநிலத்தில் நடைபெற்ற பிரசாரம் ஒன்றில் திரு டிரம்ப் கூறினார்.
அவரது இந்தக் கருத்துக்குப் பதிலடி தந்த திருவாட்டி ஆர்டர்ன், நாள் ஒன்றுக்கு அமெரிக்காவில் பதிவாகிவரும் பத்தாயிரக்கணக்கான கிருமித்தொற்றுச் சம்பவங்களையும் நியூசிலாந்தின் வெகு குறைவான சம்பவங்களையும் ஒப்பிடமுடியாது என்று சொன்னார்.

