கொவிட்-19 தடுப்பு மருந்தை மலேசியர்களுக்கு இலவசமாக வழங்க பரிந்துரை

2 mins read
509990db-800c-494b-9568-903f92ebcd6c
கொரோனா கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள   உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை எனில், உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று கூறியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம். படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19க்கான தடுப்பூசி மருந்து கிடைத்ததும், அனைத்து மலேசியர்களுக்கும் அதனை இலவசமாக வழங்க வேண்டுமென அமைச்சரவைக்கு அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சு பரிந்துரைக்கவுள்ளதாக அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியுள்ளார்.

இதன் தொடர்பில் அமைச்சரவை முடிவு எதுவும் எடுக்கவில்லை என்று கூறிய அவர், பரிந்துரைக்கப்படும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது இன்று தெரிவித்தார்.

கொவிட்-19 தடுப்பு மருந்துக்கு சீனாவை மட்டுமின்றி மற்ற மேற்கத்திய தயாரிப்பாளர்களையும் எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பான, திறன்மிகுந்த தடுப்பூசியின் தொடர்பில் யாருடனும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தடுப்பு மருந்தை வாங்குவதற்கு முன்பு அதன் பாதுகாப்பு, திறன் பற்றிய தகவல்கள் ஆராயப்படும் என்ற அவர், நீண்ட காலம் காத்திருப்பதும் சாத்தியமில்லை என்றார்.

சில நாடுகள் தடுப்பு மருந்துகளுக்காக மருந்து நிறுவனங்களுடன் முன்பதிவு செய்வதைக் குறிப்பிட்ட அமைச்சர், அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பது அவசியம் என்றார்.

இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை எனில், உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று கூறியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.

பாதுகாப்பான தடுப்பு மருந்து கிடைத்தவுடன் உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான 'கோவேக்ஸ்' எனப்படும் தடுப்பு மருந்து பகிர்வு திட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முன்கள சுகாதார ஊழியர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலம் குன்றியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

சில நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தடுப்பு மருந்து தருவதைவிட அனைத்து நாடுகளிலும் உள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து கொடுத்து பாதுகாப்பதுதான் ஒட்டுமொத்த பொருளியலை மீட்டெடுப்பதற்கான வழி என்று டெட்ரோஸ் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்