ஜெனிவா: கொரோனா தடுப்பூசி பகிர்வு திட்டத்தில் உலக நாடுகள் விரைவாக சேருமாறு வலியுறுத்தி உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள உலக மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் தடுப்பு மருந்து கிடைக்க வில்லை எனில், உலக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று கூறியுள்ளார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம்.
பாதுகாப்பான தடுப்பு மருந்து கிடைத்தவுடன் உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான 'கோவேக்ஸ்' எனப்படும் தடுப்பு மருந்து பகிர்வு திட்டத்தின்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முன்கள சுகாதார ஊழியர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏற்கெனவே உடல்நலம் குன்றியவர்களுக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
"கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்குமான மிக விரைவான வழி என்னவென்றால், சில நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் தடுப்பு மருந்து தருவதைவிட அனைத்து நாடு
களிலும் உள்ள எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பு மருந்து கொடுத்து பாதுகாப்பதுதான்," என்று டெட்ரோஸ் கூறினார்.
'கோவேக்ஸ்' திட்டத்தில் இணைய இதுவரை 92 நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாகவும் மேலும் 80 நாடுகள் இத்திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டுகின்றன.
இம்மாதம் 31ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் உலக நாடுகள் சேருமாறு சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கு இதுவரை 775,000 பேரைப் பலிகொடுத்துள்ளன.
22 மில்லியன் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையே, அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கிடைத்த பிறகு பேசிய அந்நாட்டு பிரதமர் மோரிசன், ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்களுக்கும் இலவசமாக தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் சொன்னார்.

