ஆபத்தான நெருக்கடியில் தென்கொரியா

ஆபத்தான நெருக்கடியில் தென்கொரியா

1 mins read
72989927-9679-420d-9579-3d3e2833a6d1
படம்: ஏஎப்பி -

சோல்: கிரு­மித்­தொற்­றின் இரண்­டா­வது அலை­யில் சிக்­கிக் கொண்­டுள்ள தென்­கொ­ரி­யா­வில் மார்ச் மாதத்­திற்­குப் பிறகு நேற்று ஆக அதி­க­மான கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

இந்த எண்ணிக்கை தொடர்ந்து ஆறா­வது நாளாக அதி­க­ரித்து வரும் நிலை­யில், நேற்­றைய நில­வ­ரப்­படி 297 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இவர்­களில் 166 பேர் சராங் ஜெய்ஸ் தேவா­ல­யத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். இதை­ய­டுத்து, தேவா­ல­யத்­தோடு தொடர்­பு­டைய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் 623ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இரண்­டா­வது அலை­யின் 90 விழுக்­காட்டுத் தொற்று சம்­ப­வங்­கள், தலை­ந­கர் சோல், அத­னைச் சுற்­றி­யுள்ள பகு­தி­களில் கண்­ட­றி­யப்­பட்­டவையாகும். எனவே இது 25 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான மக்­கள் வசிக்­கும் பெரு­ந­க­ரத்­தில் கிருமி வேக­மாகப் பர­வு­வது குறித்த கவ­லையை எழுப்­பி­யுள்­ளது.

"சோல் நக­ரில் வேக­மாக பர­வும் தொற்று நோயால், நாடு முழு­வ­தும் கிரு­மி பர­வும் அச்­சு­றுத்­தல் நிறைந்த, மிக ஆபத்­தான நெருக்­க­டி­யில் இருக்­கி­றோம்," என்று அந்­நாட்­டின் துணை சுகா­தார அமைச்­சர் கிம் கேங்-லிப் கூறி­னார்.

"தட­ம­றி­தல் மற்­றும் தனி­மைப்­ப­டுத்­த­லால் மட்­டுமே கிரு­மிப் பர­வலைக் கட்­டுக்­குள் கொண்டு வர முடி­யாது. தய­வு­செய்து அனை­வ­ரும் வீட்­டி­லேயே இருங்­கள்," என்­றும் அவர் சொன்­னார்.