ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில் பெருந்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரத்தில் குளிர் காலம் தொடங்கவுள்ள நிலையில், பெருந்தீ பரவத் தொடங்கியுள்ளது.
குடியிருப்பாளர் ஒருவர் தனது நிலத்தை எரித்துக் கொண்டிருந்த போது, பலத்த காற்றில் தீ அக்கம் பக்கத்திற்குப் பரவியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வியாழக்கிழமை மதியம் நிலவரப்படி, 363 ஹெக்டேர் பரப்பளவு நிலம் தீப்பிடித்தது.
இந்த தீச்சம்பவத்தால் எந்தவித உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை. ஆனால் அருகிலுள்ள நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் புகை இடைஞ்சலாக இருந்தது.
வடக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவ, நீர் மழை பொழியும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

