சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் இனி வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
தொடர்ந்து 13 நாட்களாக புதிதாக அங்கு கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகாததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முகக்கவசமின்றி வெளியே செல்லலாம் என விதி தளர்த்தப்பட்டுவிட்ட போதும் பெய்ஜிங்கில் பெரும்பாலான மக்கள் நேற்று முகக்கவசம் அணிந்தவாறே வெளியில் நடமாடியதைக் காண முடிந்தது.
பெய்ஜிங்கில் இப்படி முகக்கவச விதி தளர்த்தப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. கொரோனா பரவலைத் தொடர்ந்து அங்கு இருமுறை பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது அங்கு இயல்புநிலை பெரும்பாலும் திரும்பிவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பெய்ஜிங்வாசிகள் முகக்கவசமின்றி வெளியில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் நகரின் தென்பகுதியில் உள்ள மொத்த விற்பனைச் சந்தை ஒன்றில் கொரோனா பரவத் தொடங்கியதை அடுத்து, முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக, சீனாவில் சமூகத்தில் எவரையும் கொரோனா தொற்றவில்லை.
முகக்கவசம் அணிவது, கட்டாயமாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது, பெரிய அளவில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தியதே சீனாவால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தமுடிந்தது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் இருந்து சீனா சென்றவர்களில் 22 பேரை நேற்று முன்தினம் கொரோனா தொற்றிவிட்டது. அந்தக் கொள்ளை நோய் தொடங்கிய இடமான சீனாவில் இதுவரை 84,917 பேரை அது தொற்றிவிட்டது.

