மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்

மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பங்ளாதேஷ் ஊழியர்

2 mins read
754e0163-3912-4ff6-a64c-ffd9997b9478
மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட முஹமட் ரேஹான் கபீர். படம்: மஜ்லிஸ் கெசெலமேடான்/ ஃபேஸ்புக் -

கோலாலம்பூர்: அல் ஜசீரா தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்தில் மலேசியாவில் குடியேறிகள் நடத்தப் படும் விதம் குறித்து குறை கூறிய பங்ளாதேஷ் ஊழியர் அதிரடியாக மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனை மலேசிய குடிநுழைவுத் துறை நேற்று உறுதி செய்தது.

வெள்ளிக்கிழமை இரவு பங்ளாதேஷ் நாட்டுக்கு முஹமட் ரேஹான் கபீர் திருப்பியனுப்பப்பட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் கைரூல் டிசைமி தாவூத் தெரிவித்தார்.

அன்று இரவு கோலாலம்பூர் விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகளுடன் ரேஹான் காணப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களை நோக்கி அவர் உற்சாகத்துடன் கையசைத்தார்.

கடந்த ஜூலை மாதம் அல் ஜஸிரா தொலைக்காட்சி ஒளிபரப்பிய விளக்கப்படத்தில் மலேசியாவில் கிருமிப்பரவல் சூழலில் முறையான ஆவணங்கள் இல்லாத குடியேறிகளை அதிகாரிகள் நடத்தும் விதம் அவர் குறை கூறிபேசி யிருந்தார்.

இது, கொவிட்-19க்கு எதிராக கடுமையாகப் போராடி வரும் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த மாதம் 25 வயது ரேஹானை போலிசார் கைது செய்தனர்.

மலேசியாவில் மீண்டும் நுழையாமல் இருக்க அவரது பெயரை கறுப்புப் பட்டியலில் போலிசார் சேர்த்தனர்.

இதற்கிடையே ரேஹான் கைது செய்யப்பட்டது கவலையளிப்பதாக கத்தாரை தளமாகக் கொண்டு செயல்படும் அல் ஜஸிரா கூறியது.

பேச முடியாமல் தவிக்கும், எளிதில் பாதிப்படக்கூடியவர்களுக்காக ரேஹான் குரல் கொடுத்திருந்தார் என்று அது தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பில் அல்-ஜஸிரா அலுவலகத்தையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த நிறுவனத்தின் செய்தியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மலேசியாவில் கிருமிப்பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது ரொஹிங்யா அகதிகள், குழந்தைகள் உட்பட ஆவணங்கள் இல்லாத நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருமிப்பரவலைத் தடுக்க இத்தகைய கைது நடவடிக்கை தேவை என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால் இது மனிதாபிமானமற்ற செயல் என்று மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.