கொவிட்-19க்கு பிறகு சீனாவுக்கு புது சவால்

கொவிட்-19க்கு பிறகு சீனாவுக்கு புது சவால்

2 mins read
48d3e3e1-4ac7-41e2-9f3c-44c717e61783
சீனாவின் தென்மேற்கிலும் மத்திய பகுதியிலும் வெள்ளப் பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர்.  படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: கொரோனா கிருமிப் பரவல் ஓரளவு ஒடுங்கிய நிலையில் சீனாவின் தலைவர்கள் தற்போது வெள்ள அபாயத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாட்டின் தென்மேற்கிலும் மத்திய பகுதியிலும் வெள்ளப் பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துவிட்டனர். பல மில்லியன் பேர் அவர்களின் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் பத்திரமாகத் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

யாங்ஸி ஆற்றில் இந்த வாரத்தில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிசுவான் மாகாணத்தையும் சோங்சிங் பெருநகரத்தை பாதித்திருக்கும் வேளையில் த்ரீ கோர்ஜஸ் அணையின் நீர்மட்டம் அதன் அதிகபட்சக் கொள்ளளவை எட்டிவிட்டது.

இவ்வாண்டில் வெள்ளத்தால் ஏராளமான உயிர்கள் பலியானதோடல்லாமல் பெருமதிப்பிலான சொத்துகளும் நாசமாகிவிட்டன.

அரசாங்க அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த மற்றொரு மாகாணமான அன்ஹுயிவுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை சென்று நிலைமையை ஆராய்ந்த அதிபர் ஸி ஜின்பிங், "சீனா பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கைச் சீற்றங்களுடன் பேராடியதன் விளைவாக அவற்றைச் சமாளிக்கும் அனுபவத்தைப் பெற்றுள்ளது," என்றார்.

"நமது பேரிடர்களை முறியடிக்கும் போராட்டத்தைக் கைவிடாது தொடருவோம்," என்றும் அவர் கூறினார்.

நிவாரணப்பணிகள் பற்றிக் குறிப்பிட்ட அவர், "தலைமைத்து வமும் நமது ராணுவத் தளபத்திய முறையும் மேற்கொண்டிருக்கும் செயல்முறைத் தேர்வு," என்றார்.

நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மக்களின் விடுதலை ராணுவம், மக்களின் ஆயுதப் போலிஸ் படை ஆகியவற்றின் அதிகாரிகள் முன்னிலையில் கடந்த புதன்கிழமை அதிபர் ஸி உரை நிகழ்த்தினார்.

வெள்ளத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சிகளின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்தாரை அப்போது சந்தித்த அவர் அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அதிபர் ஸியும் பிரதமர் லி கெச்சியாங்கும் நேரில் சென்று பார்வையிடுவது நெருக்கடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

கொள்ளைநோயால் பொருளியலை மீட்டெடுக்கப் போராடி வரும் சீனாவுக்கு வெள்ளத்தின் சீற்றம் மற்றொரு பேரிடியாகக் கருதப்படுகிறது.

யாங்ஸி ஆற்றின் சீற்றம் பாதித்த சோங்சிங் மாகாணத்தை பிரதமர் லி சுற்றிப்பார்த்தார்.

அந்த ஆற்றின் நீர்மட்டம் கரைகளைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.

இவ்வாண்டில் இவ்வாறு கரை கடந்து வெள்ளம் ஓடுவது இது ஐந்தாவது முறை.

துயர்துடைப்புப் பணிகளில் தன்னால் இயன்றவற்றை அரசாங்கம் செய்துவருவதாக சீனாவின் தலைவர்கள் மக்களிடம் கூறிவந்தாலும் சிலருக்கு ஆட்சி நிர்வாகத்தின் மீது சந்தேகம் கிளம்பியுள்ளது.

இயற்கையாலும் மனிதர்களாலும் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் பேரிடர்கள் இவ்வாண்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறித்து சீன மக்கள் கேள்வி எழுப்பக் கூடும்.

மேலும் சீனாவின் ஆட்சிமுறை குறித்தும் அதன் ஆற்றல் குறித்தும் பலருக்குச் சந்தேகம் ஏற்படலாம் என வூ கியாங் என்னும் தன்னிச்சை அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.