கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க, பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் வேளையில், அனைத்துலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800,000ஐ தாண்டியதாக ஏஎஃப்பி நேற்று (ஆகஸ்ட் 22) தெரிவித்தது.
கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்கு ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிருமித்தொற்று பரவல் அதிகரித்து, இரண்டாம் அலை தொற்றாக அச்சுறுத்தி வருகிறது.
ஆசிய அளவில், கிருமிப்பரவலைப் பெரிதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தென்கொரியாவில், கிருமிப் பரவல் மீண்டும் தலைதூக்கியிருப்பதால் அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்கப்போவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
உலக அளவில் கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு இரட்டிப்பாகி தற்போது 800,000ஐக் கடந்துள்ளது.
கடந்த 17 நாட்களில் மட்டும் 100,000 பேர் கிருமித்தொற்றால் உயிரிழந்தனர்.
கிருமித்தொற்றால் இதுவரை 23 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட சளிக்காய்ச்சல் கொள்ளைநோயுடன் தற்போதைய கொரோனா பரவலை ஒப்பிட்ட உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதேனோம் கெப்ரியாசுஸ், தற்போதைய கொள்ளைநோய்ப் பரவலை விரைந்து தடுக்கமுடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
1918ஆம் ஆண்டு ஏற்பட்ட சளிக்காய்ச்சல் கொள்ளைநோய் சுமார் 50 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய உலகமயமாதல், நெருக்கம், தொடர்பு போன்ற சாதகமற்ற சூழல்களால் தற்போது பரவல் வேகமெடுத்தாலும், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஈராண்டுகளுக்குள்ளாக அதனை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளுடன் தடுப்பு மருந்துகள் போன்ற கூடுதல் அம்சங்களுடன், 1918ஆம் ஆண்டின் சளிக்காய்ச்சலைவிட குறுகிய கால அளவிலேயே இதனை முறியடிக்க முடியும் என்றார் அவர்.

