விடுமுறைப் பயணங்கள் தொடங்கின; கிருமித்தொற்று சம்பவங்கள் பெருகின

1 mins read
ee1cf579-9ef4-487b-b562-19737919e311
இத்தாலியில் ஆகஸ்ட் மாதத்தின் ஒரு வாரத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்புடையது. குறிப்பாக, குரோஷியா, மால்டா, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். படம்: ஏஎப்பி -

பாரிஸ்/ரோம்: மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் சூழலுடன் ஐரோப்பிய நாடுகள் போராடத் தொடங்கியுள்ளன. பலர் விடுமுறைக் காலப் பயணங்களுக்கும் கோடைக்கால ஒன்றுகூடல்களுக்கும் பயணம் செய்வதால் இந்த நெருக்கடி.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கடுமையாக்கி வந்தாலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட முடக்கநிலைக்கு மீண்டும் செல்லத் தயக்கம் காட்டுகின்றன.

மீண்டும் நாடு முடக்கநிலைக்குச் சென்றால் அதனால் ஏற்படும் சேதம் மிக அதிகமாக இருக்கும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோன் சென்ற வாரம் கூறியிருந்தார்.

பிரான்சில் 3,602 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் நேற்று முன்தினம் பதிவாகின.

வெள்ளிக்கிழமை அன்று அங்கு 4,586 புதிய சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

ஐரோப்பிய நாடுகளில் கிருமித்தொற்றால் முன்னதாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. அங்கு நேற்று முன்தினம் 1,071 சம்பவங்கள் பதிவாகின. பிரான்ஸ், ஸ்பெயினைக் காட்டிலும் இத்தாலியில் கிருமியின் தாக்கம் தற்போது குறைந்துள்ளது.

இருப்பினும் ஆகஸ்ட் மாதத்தில் இத்தாலிக்குச் சுற்றுப்பயணிகள் திரும்பத் திரும்ப வருவதாலும் விமான நிலையங்களில் பரிசோதனை மையங்களை உருவாக்குவதில் சில பகுதிகள் விரைந்து செயல்படாததாலும் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டு கிருமியியல் நிபுணர் ஃபிரான்செஸ்கொ புரொக்கொலொ கூறியுள்ளார்.

இத்தாலியில் ஆகஸ்ட் மாதத்தின் ஒரு வாரத்தில் பதிவான புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தொடர்புடையது. குறிப்பாக, குரோஷியா, மால்டா, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.