ஜெருசலம்: கொவிட்-19 சூழல் கருதி அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய நகரான டெல் அவிவ், அதன் மக்களை மகிழ்விக்க ஒரு புத்தாக்க முயற்சியில் இறங்கியுள்ளது.
இஸ்ரேலில் அமைந்துள்ள 'யார்கொன் பார்க்' ஏரியில், படகுகளில் அமர்ந்தவாறு மக்கள் திரைப்படங்களை ஒரு பெரிய திரையில் கண்டு ரசிக்கலாம். கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கிய இம்முயற்சி, இம்மாத இறுதி வரை ஒவ்வொரு மாலையும் தொடரும்.
இரண்டு மீட்டர் பாதுகாப்பு இடைவெளியுடன் சுமார் 70 படகுகளில் மொத்தம் 200 பேர் வரை உட்கார்ந்து தங்கள் பொழுதை இவ்வாறு கழிக்கலாம் என்று கூறப்பட்டது. கிருமித்தொற்று காரணத்தால் இஸ்ரேலில் தற்போது கலாசார நிகழ்வுகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
இதுவரை அங்கு 102,080 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 819 பேர் உயிரிழந்துவிட்டனர்.
படம்: ஏஎஃப்பி

