தடை இருந்தும் கொண்டாட்டம்: குறைந்தது 13 உயிர்கள் நசுங்கின

தடை இருந்தும் கொண்டாட்டம்: குறைந்தது 13 உயிர்கள் நசுங்கின

1 mins read
d29620be-63ff-48ba-b61c-03638b75025e
PHOTO: MPFN_LN/TWITTER -

லிமா: கொவிட்-19 சூழல் கருதி ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு பெரு தடைவிதித்துள்ள நிலையிலும், உல்லாச இரவு விடுதி ஒன்றில் நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு போலிசார் நடத்திய அதிரடிச் சோதனையால் குறைந்தது 13 பேர் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர்.

கொரோனா கிருமியின் பிடியில் லத்தீன் அமெரிக்கா சிக்கித் திணற, கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளை பெரு இம்மாதம் நடப்புக்குக் கொண்டு வந்தது.

இருப்பினும் சமூக ஊடகம் வழி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சட்டவிரோதப் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுமார் 120 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

ஒரே ஒரு வாசல் இருந்ததால் அனைவரும் போலிசாருக்கு அஞ்சி ஓட, ஒருவர் மீது ஒருவர் மிதித்து அங்கேயே அவர்கள் சிக்கி இறந்ததாக அமைச்சு கூறியது.

இருப்பினும், சம்பவ இடத்திலும் அருகே இருந்தவர்களும் சொன்ன கதை வேறு. போலிசார் இரவு விடுதிக்குள் நுழைந்து கண்ணீர்ப் புகையை விட்டதாகவும் அங்கிருந்தோர் நெருக்குதலுக்கு ஆளானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, கொள்ளை நோய் சூழலில் நிகழ்வை அனுமதித்த இரவு விடுதி உரிமையாளர்களுக்கு அதிகபட்சத் தண்டனை கொடுத்தாக வேண்டும் என்று அந்நாட்டு மகளிர் அமைச்சர் கோரியுள்ளார்.

அரை மில்லியனுக்கு மேலான கிருமித்தொற்று சம்பவங்களும் 27,000க்கு மேல் உயிரிழப்புகளும் பெருவில் பதிவாகியுள்ளன.