மணிலா: தெற்கு பிலிப்பீன்சின் ஜோலோ நகரில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்
பட்டனர்.
தெற்கு பிலிப்பீன்சின் ஜோலோ நகரில் உள்ள வணிக கட்டடத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தைக் குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
நேற்று பகலில் நடந்த இந்த சம்பவத்தில் ஆறு ராணுவ வீரர்களும் ஆறு பொதுமக்களும் பலியானதாகவும் 16 வீரர்கள் காயமடைந்ததாகவும் தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் செய்தி கூறகிறது.
இதைத்தொடர்ந்து மதியம் 1 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே மற்றோர் தெருவில் இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படும் பெண் ஒருவரும் ராணுவ வீரர் மற்றும் போலிஸ்காரர் ஒருவரும் மாண்டனர்.
இத்தாக்குதல்களுக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
இது தற்கொலை படைத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று பிலிப்பீன்ஸ் உயர் ராணுவ அதிகாரி வின்லுன் சொன்னார்.
சம்பவத்திற்கு முன்பாக, ராணுவ வீரர் ஒருவர் அங்கு இருந்த ஒரு பெண்ணை அணுக முயன்றபோது, அவர் குண்டை வெடிக்கச் செய்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மேற்கோள்காட்டி அவர் சொன்னார்.
இத்தாக்குதல்கள் அபுசாயஃப் தீவிரவாதக் குழுவின் வேலையாக இருக்கலாம் என்றும் அவர் சொன்னார். மேலும் இத்தீவிரவாதக் குழுவின் தலைவனான ஹதிப் சவட்ஜானின் மருமகன் முண்டி சவட்ஜான் அண்மைய தாக்குதல்களில் முக்கிய சந்தேக நபராக கருதப்
படுவதாகவும் அவர் சொன்னார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் இதே ஜோலோ நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 23 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

