முகைதீன்: யாரும் விதிவிலக்கல்ல
பெட்டாலிங் ஜெயா: தோட்டத்துறை அமைச்சர் கைருதின் அமான் ரசாலி தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின்.
"பெரிக்கத்தான் அரசாங்கம் ஒவ்வொரு மலேசியரும் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது, யாருக்கும் விலக்கு இல்லை. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விட்டுவிடுகிறேன்," என்றார் அவர்.
மலேசியா ஏர்லைன்ஸ்: சிறார்களுக்கு இலவச பயணம்
கோலாலம்பூர்: கிருமிப் பரவல் காரணமாக மக்கள் வெளியே செல்ல தயங்கும் நேரத்தில் பயணிகளை ஈர்ப்பதற்காக சிறார்களுக்கு இலவச பயணச் சலுகையை அறிவித்துள்ளது மலேசிய ஏர்லைன்ஸ். செப்டம்பர் 2ஆம் தேதி நடப்பில் இருக்கும் இச்சலுகையின் கீழ் ஒவ்வோர் விமான டிக்கெட் முன்பதிவுக்கும் 11 வயதுக்குட்பட்ட சிறார் ஒருவர் இலவசமாக பயணம் செய்யலாம். மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீட்டுக்கொள்ளப்பட்டதில் இருந்து மக்கள் பயணங்களை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாக விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் சொன்னார்.
தோக்கியோ: கிருமி பரவல் குறைந்தது
தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் ஒன்றரை மாங்களுக்குப் பிறகு ஆகக் குறைவான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று 95 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இது கடந்த ஜூலை 8ஆம் தேதிக்குப் பிறகு ஆகக் குறைவான எண்ணிக்கையாகும். இம்மாத தொடக்கத்தில் 400க்கும் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று தொற்றுக்கு ஆளானவர் களில் 60 விழுக்காட்டினர் 40 வயதிற்கும் குறைவானர்கள் என்றும் தோக்கியோ சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காய்கறிகள் பயிரிட்டு விலங்குகளின் பசிபோக்கும் விலங்கியல் தோட்டம்
ஹோ சி மின்: கிருமிப் பரவல் காரணமாக வியட்னாமின் 150 ஆண்டுகள் பழமையான சைகோன் விலங்கியல் தோட்டத்திற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. எனவே, அங்கிருக்கும் 1,400க்கு மேற்பட்ட விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது. இதையடுத்து, நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியது விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகம்.
அத்துடன் காய்கறிகள், பூக்கள் போன்றவற்றை விளைவித்து விற்பனை செய்வது, வீடுகளுக்குச் சென்று தோட்டம் அமைத்தல், விவசாயிகளுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து அவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு செலவுகளைச் சமாளிக்கிறது வியட்னாம் விலங்குக்காட்சி. அத்துடன் நன்கொடையாக கிடைக்கப்பெறும் காய்கறிகளையும் பெற்று அங்குள்ள விலங்குகளின் பசியைப் போக்குவதாகக் கூறுகிறார் விலங்கியல் தோட்டத்தின் தலைவர் திரு பாம் வான் டான்.

