வாஷிங்டன்: பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனா தொற்றுக்கு எதிராக சோதனைக்குரியது மட்டுமே என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு அது சிகிச்சை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அவசரக்கால பயன்பாடாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவைக் கொண்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது. ஆனால் பிளாஸ்மா திரவம் மூலம் சிகிச்சை அளிப்பது முடிவான விஷயம் அல்ல என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு பரிசோதனையாக மட்டுமே தாங்கள் பார்ப்பதாகக் கூறிய அவர், பரிசோதனை முறைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து உறுதியான ஆதாரங்களுக்காக காத்திருப்பதாகவும் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவரான மருத்துவர் ஹான், பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன் அளித்ததாகக் கூறியதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
"இந்த அறிவிப்புக்குப் பிறகு நான் பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் அவை நியாயமானவை. விளக்க உரையின் போது நான் குழம்பிவிட்டேன்.
"நான் இதை எப்படி சொல்லியிருக்க வேண்டுமென்றால், தரவுகளின் அடிப்படையில் பிளாஸ்மா சிகிச்சை ஆபத்தைக் குறைக்கிறது என்றாலும் இதுவொரு முழுமையான தீர்வாகாது எனக் கூறியிருக்க வேண்டும்," என்றார் அவர்.

