நியூயார்க்: போலிசாரால் கறுப்பினத்தவர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து, விஸ்கோன்சின் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களிடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி வைத்திருந்த ஒருவரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் விரைந்ததையும் அவர்களை நோக்கி அந்த ஆடவர் சுட்டதையும் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பின்னணியில் துப்பாக்கி சுடும் சத்தங்கள் கேட்டன.
கரத்தில் மோசமான காயத்துடன் தரையில் உட்கார்ந்துகொண்டிருந்த ஆடவருக்கு துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவர் உதவுவதையும் அவர்களை போலிசார் நெருங்குவதையும் காட்டும் இன்னொரு காணொளி சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது. ஜேக்கப் பிளேக் எனும் கறுப்பினத்தவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போலிசார் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து விஸ்கோன்சின் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.
ஜேக்கப் பிளேக் தமது கார் கதவைத் திறந்தபோது போலிசார் அவரது முதுகில் சுட்டதாக காணொளி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது பிளேக்கின் மூன்று மகன்கள் காருக்குள் இருந்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் கூறினர். துப்பாக்கியால் சுடப்பட்ட 29 வயது பிளேக்கின் உடல் செயல் இழந்துள்ளதாகவும் அவர் உயிருக்குப் போராடி வருவதாகவும் அவரது குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் கூறினர்.
நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இருவர் காயம் அடைந்தனர். ஒருவர் மரணம் அடைந்தார்.

