நியூசிலாந்தில் 2 பள்ளிவாசல்களில் 51 பேரைக் கொன்ற பிரன்டனுக்கு சாகும் வரை சிறைவாசம்

நியூசிலாந்தில் 2 பள்ளிவாசல்களில் 51 பேரைக் கொன்ற பிரன்டனுக்கு சாகும் வரை சிறைவாசம்

2 mins read
e5ea6c46-12b8-433a-a966-b828074aedfd
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து உயிர்பிழைத்தவர்களும், அந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரும் தீர்ப்பை அறிந்து நிம்மதி அடைந்தனர். சிலர் இறந்துபோன உறவினர்களை நினைத்து கண்ணீர் வடித்தனர். படம்: ஏஎஃப்பி -

நியூசிலாந்தில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் அதிரடியாக நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக பலரை சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியருக்கு நேற்று சாகும் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

'பரோல்' அல்லாத ஆயுள் தண்டனையால் 29 வயது பிரன்டன் டரன்ட் எந்தக் காரணத்துக்காகவும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்.

நியூசிலாந்தின் வரலாற்றில் இத்தகைய தண்டனை ஒருவருக்கு விதிக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும் நியூசிலாந்து வரலாற்றில் இதற்கு முன் பயங்கரவாதச் செயலுக்கு இதுபோன்று தண்டனை விதிக்கப்படவில்லை.

விசாரணையில் 51 பேரை கொலை செய்ததையும் 40 பேரை கொலை செய்ய முயற்சி செய்ததையும் ஒரு பயங்கரவாத செயலையும் அவன் ஒப்புக் கொண்டான்.

அவனது செயல் மனிதாபிமானமற்றது, சிறிதுகூட அவன் வருத்தப் பட்டதாகத் தெரியவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

சமூக ஊடகத்தில் நேரடியாக ஒளிபரப்பியவாறே பலரை அவன் அடுத்தடுத்து சுட்டுக்கொன்ற காட்சி உலக மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

"நீ செய்த குற்றங்களுக்காக உன்னை சாகும் வரை சிறையில் அடைத்தாலும் போதாது," என்று கிறைஸ்ட்சர்ச் நீதிமன்ற நீதிபதி கேமரன் மேன்டெர் கூறினார்.

'பரோல்' அல்லாத தண்டனை பற்றி பேசிய அவர், இதற்கு இந்தத் தண்டனையை விதிக்காமல் வேறு எதற்கு விதிக்க முடியும் என்று சொன்னார்.

ஆயுள் தண்டனையில் நன்னடத்தை போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்கூட்டியே விடுவிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் பிரன்டன் டரன்டுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் அவர் சாகும் வரை சிறையில் இருந்தாக வேண்டும். நியூசிலாந்தில் மரண தண்டனை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரன்டனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வரவேற்ற பிரதமர் ஜெசிண்டா ஆர்டெர்ன், அவரைப் பற்றி இனிமேல் யோசிக்க வேண்டியதில்லை என்றார்.

கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இரண்டு பள்ளிவாசல்களில் நுழைந்து பிரன்டன் டரன்ட் துப்பாக்கியால் சுட்டான்.

முதலில் அல் நூர் பள்ளிவாசலில் நுழைந்த அவன், தொழுகை செய்துகொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டான்.

அவன் தன்னுடைய தலை மீது வைத்திருந்த கேமரா மூலம் சம்பவத்தை நேரடியாக ஃபேஸ்புக் மூலம் ஒளிபரப்பினான்.

பின்னர் லின்வுட் இஸ்லாமிய நிலையத்துக்கு காரில் சென்ற அவன் வெளியே இருந்த இருவரை துப்பாக்கியால் சுட்டான். ேமலும் சிலரை அவன் சன்னல் வழியாக சுட்டான்.

அப்போது இஸ்லாமிய நிலையத்திலிருந்து வெளியே ஓடி வந்த ஒருவர் அவனை துரத்தியடித்தார்; பின்னர் போலிசார் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவங்களில் மொத்தம் 51 பேர் கொல்லப்பட்டனர்; ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.