கிருமித்தொற்று; தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்பட்டது

கிருமித்தொற்று; தென்கொரிய நாடாளுமன்றம் மூடப்பட்டது

1 mins read
b7a777d0-bef9-4f02-b1bd-09617e2c5ea0
படம்: ஏஎப்பி -

சோல்: தென் கொரியாவில் கிருமித்தொற்று அச்சம் காரணமாக நாடாளுமன்றம் நேற்று மூடப்பட்டது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

நாடு முழுவதும் கிருமித்தொற்று சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 400 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா கிருமி பரவியபோது சீனாவுக்கு அடுத்ததாக தென்கொரியாதான் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் கிருமிப் பரவலின் தடங்களைக் கண்டறிதல், பரவலான சோதனைகள் போன்றவை தீவிரமாக்கப்பட்டதால் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் இரண்டாவது அலையாக மீண்டும் கிருமித் தொற்று அதிகரித்து வருகிறது.

வியாழக்கிழமை பதிவான 400 புதிய தொற்றுச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சோல் நகரைச் சேர்ந்தவர்கள்.

கடந்த சில வாரங்களாக 30 முதல் 40 பேர் வரை மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று திடீரென எதிர்பாராத அளவுக்கு கிருமித் தொற்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதற்கிடையே ஆளும் கட்சியின் கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நாடாளுமன்றம் மூடப்பட்டது.

கட்சித்தலைவர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்ட தோடு சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டனர்.

புதன்கிழமை அன்று அந்த செய்தியாளருடன் ஏறக்குறைய 50 பேருக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சிகளும் தங்களுடைய சந்திப்புகளை ரத்து செய்துள்ளன.