செய்திக்கொத்து (29-8-2020) உலகம்

செய்திக்கொத்து (29-8-2020) உலகம்

2 mins read
8098009c-92d9-4c6b-9c48-aa0637cc7203
-

பிலிப்பீன்ஸ் நடவடிக்கை

மணிலா: தென்சீனக் கடல் மீட்புத் திட்டங்களில் சீனாவுக்கு ஒத்துழைக்கும் சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆதரிப்பதாக பிலிப்பீன்ஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்க சீன ராணுவத்திற்கு உதவுவதாகக் கூறி, அமெரிக்கத் தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை வாங்குவதற்கு 24 சீன நிறுவனங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்ததையடுத்து, பிலிப்பீன்சும் அதைக் கடைப்பிடிக்கவுள்ளது.

பிரான்சில் அதிகரிக்கும் தொற்று

பாரிஸ்: பிரான்சின் கிருமித்தொற்று சிவப்பு மண்டலங்கள் இரண்டிலிருந்து இருபதாக அதிகரித்துள்ளதையடுத்து, பாரிசில் மட்டுமல்லாமல் அதன் உட்புற நகரங்களிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த வாரம் பள்ளிகளைத் திறக்கவும், மக்கள் வேலைக்குத் திரும்புவதும், சைக்கிள் பந்தயத்தைத் தொடங்கவும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மே மாதத்திற்குப் பிறகு ஆக அதிகமாக நேற்று முன்தினம் 6,111 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

வெளிநாட்டினருக்கு அனுமதி

தோக்கியோ: வெளிநாட்டினருக்கான மறுநுழைவு தடையை வரும் செப்டம்பர் மாதம் முதல் நீக்கவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அறிவித்துள்ளார். தனது பதவி விலகல் செய்தியை தெரிவிப்பதற்குச் சற்று முன்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஜப்பானில் தங்க நீண்ட நாள் அனுமதி அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டினர் இனி ஜப்பான் செல்வதற்கு இது வழிவகுக்கும்.

குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

கந்தகார்: ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தகாரில் திருமண நிகழ்வு ஒன்றிற்குச் சென்றுவிட்டு, வேன் ஒன்றில் சிலர் வீடு திரும்பினர். அப்போது சாலையோரமாக மறைத்து வைக்கப் பட்டிருந்த வெடிகுண்டு ஒன்றின் மீது வேன் ஏறியதால், குண்டுவெடித்து அதில் பயணம் செய்த குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர்.