ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே பதவி விலகுவதால் பிரதமர் பதவிக்குப் போட்டி அதிகரித்துள்ளது.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதிவாக்கில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கவுள்ளது.
ஆனால் தேதியை அக்கட்சி இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.
திரு அபே, தாம் பெருங்குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதன் காரணமாக பதவி விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
பிரதமரைத் தேர்வு செய்வதில் எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் பல வாய்ப்புகளை ஆளும் கட்சி பரிசீலிக்கலாம் எனத் தெரிகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்வது ஒரு வழக்கம். இல்லையென்றால் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஆனால் தற்போதுள்ள கொவிட்-19 நெருக்கடியில் பிரதமரை அவசரமாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட்டாரத் தலைவர்கள் மூலம் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஃபியுமியோ கிஷிடா ஏற்கெனவே போட்டி களத்தில் இறங்கிவிட்டார்.
இவர்தான் தமக்குப் பிறகு பிரதமராக வேண்டும் என்பது திரு அபேயின் விருப்பமாகும்.
முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபாவும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இவர், வாக்காளர்களிடையே பிரபலமாக இருந்தாலும் கட்சி ஆதரவு குறைவு என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிதி அமைச்சரான டாரோ அசோ ஏற்கெனவே பிரதமர் பொறுப்பில் இருந்தவர். திரு அபேவுக்குப் பிறகு இவர்தான் பிரதமர் ஆவார் என நீண்டகாலமாக பேசப்பட்டது. ஆனால் பிரதமர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று டாரோ அசோ அறிவித்துள்ளார்.
இவர்களைத் தவிர சக்திவாய்ந்த அமைச்சரவை செயலாளரான ஹோஷிஹைட் சுகா, தற்போதைய தற்காப்பு அமைச்சர் டாரோ கோனோ ஆகியோரும் பிரதமர் வேட்பாளராக களத்தில் இறங்கலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

