தென்கொரியாவில் கொவிட்-19 கிருமித்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
நான்காவது நாளாக இன்று கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300ஐத் தாண்டியுள்ளது.
இதனால் அரசாங்கம், கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கியிருக்கிறது.
இன்று மட்டும் புதிதாக 323 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவர்களில் 15 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் உள்ளூரில் பரவிய கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களுடன் சேர்த்து நாட்டில் மொத்தம் 19,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு, நோய்த் தடுப்பு நிலையம் தெரிவித்தது.
இதற்கிடையே கிருமித் தொற்றுக்கு மேலும் ஐந்து பேர் பலியாகிவிட்டனர்.
இவர்களுடன் சேர்த்து மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 321ஐக்கு அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கிருமிப்பரவல் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை.
இதையடுத்து சோல் மத்திய வட்டாரத்தில் சமூக இடைவெளி விதிமுறையை செப்டம்பர் 6ஆம் தேதிவரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் சோல், இன்சியான், கியோங்கி மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய வட்டாரத்தில் உள்ள உணவகங்கள், காப்பிக் கடைகளில் இரவு 9.00 மணி வரையில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உணவு, காப்பி அருந்த முடியும். இரவு 9.00 மணிக்கு மேல் உணவைப் பொட்டலமாக வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லலாம்.

