மலேசிய பிரதமர் முகைதீனுக்கு பின்னடைவு

2 mins read
6a96ea6b-ece0-4771-90f2-9581253daffb
முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். கோப்புப்படம் -

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் முகைதீன் யாசினுக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய கூட்டணியைத் தொடங்கும் முடிவை அவர் ஒத்திவைத்துள்ளார்.

சாபாவில் அம்மாநில கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியைத் தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். சனிக்கிழமை இரவு இது பற்றிய அறிவிப்பு சாபாவில் ஆரவாரத்துடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மாநில கட்சிகளுடன் நடைெபற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேசிய கூட்டணியைத் தொடங்கும் முயற்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. சாபா மாநிலத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதையொட்டி நேற்று சாபாவுக்கு வந்த பிரதமர் முகைதீன், காலையில் நடைபெற்ற அவரது மலேசிய பிரிபூமி பெர்சத்துக் கட்சிக் கூட்டத்தில் புதிய கூட்டணியின் சின்னத்தை வெளியிட்டார்.

இதே சின்னத்தின் கீழ் மற்ற கட்சிகளும் போட்டியிட வேண்டும் என்பது பெர்சத்துக் கட்சியின் விருப்பமாகும். பிற்பகலில் மாநில கட்சிகளுடன் பெர்சத்துக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் தேசிய கூட்டணி அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. தேசிய கூட்டணியில் இடம்பெறு வதற்காக சாபா உள்நாட்டு ஒருமைப்பாட்டுக் கட்சி, பாஸ் கட்சி, மலேசிய இந்தியர் காங்கிரஸ் ஆகியவை கையொப்பமிட்டிருந்தன.

ஆனால் இவ்வார முற்பகுதியில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் பின்வாங்கிவிட்டது. சாபாவில் உள்ள மாநில கட்சிகளும் கூட்டணியில் சேரவில்லை. பிரதமர் முஹைதீன் தரப்பினர் புதிய தேசிய கூட்டணி தொடங்குவதை ஒத்திவைத்தாலும் 2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி, சரவாக் கபுங்கான் கட்சி, பாஸ் கட்சி மற்றும் சாபாவில் உள்ள சிறிய கட்சிகள் ஆகியவற்றுடன் அதிகாரபூர்வமற்ற கூட்டணி ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர்.