அனைத்துலக அளவில் 25 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 25,029,250 பேர் இந்த மூச்சுத் திணறல் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுவரை 842,915 பேர் உயிரிழந்தனர்.
இதில் 40 விழுக்காடு கொவிட்-19 சம்பவங்கள் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரு நாடுகளில் பதிவானவை. இவ்விரு நாடுகளும் கொவிட்-19ஆல் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்டவை.
ஒவ்வொரு நான்கு நாட்களிலும் கூடுதலாக 1 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதாக ஏஎஃப்பியின் கிருமித்தொற்று எண்ணிக்கை குறிப்பிடுகிறது.
இதற்கிடையே, இந்தியாவிலும் கிருமித்தொற்று எண்ணிக்கை பெருகி வருகிறது. 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத உச்சமாக 78,761 பேருக்கு இன்று கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருளியல் வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல், நாடுகள் கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதும் அதிகரித்து வரும் கிருமிப் பரவலுக்குக் காரணமாக அமைகிறது.

