முதல் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரேசிலில் 120,000க்கும் அதிகமானோர் கொவிட்-19ஆல் உயிரிழந்ததாக நேற்று (ஆகஸ்ட் 29) தெரிவிக்கப்பட்டது.
சுமார் 212 மில்லியன் மக்கள் வாழும் அந்த நாட்டில் இதுவரை 120,262 கொவிட்-19 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன; 3,846,153 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தினசரி தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் 182,000 பேர் கொவிட்-19ஆல் உயிரிழந்துள்ள நிலையில் அதற்கு அடுத்தபடியாக பிரேசில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசியா நாடுகளில் அதிகரித்த கிருமித்தொற்று பரவல் மெதுவடைவதைப்போலன்றி, பிரேசிலில் கிருமிப் பரவல் மெதுவாக, ஆனால், பேரழிவை உண்டாக்கும் விதத்தில் பரவி வருகிறது என பொதுச் சுகாதாரக் கழகமான ஃபியோகுரூஸின் ஆய்வாளர் கிரிஸ்டோவம் பார்செல்லோஸ் தெரிவித்தார்.
"மிக அபாயகரமான நிலையில், தொற்று பரவல் நிலைத்தன்மையை எட்டியுள்ளது. நாளுக்கு 1,000 உயிரிழப்புகள், 40,000 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. பிரேசிலில் கிருமித்தொற்று இன்னும் உச்சக்கட்டத்தை எட்டவில்லை," என்றார் அவர்.
இத்தாலியிலிருந்து திரும்பிய சாவ் பாலோ நகரத்தைச் சேர்ந்த வர்த்தகருக்கு கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி பிரேசிலில் முதல் கிருமித்தொற்று சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டது. மார்ச் 16ஆம் தேதி அங்கு முதல் நபர் கொவிட்-19ஆல் உயிரிழந்தார்.
கடந்த மாதம் அந்நாட்டு அதிபருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டது.
சாவ் பாலோ, ரியோ டி ஜெனிரோவில் வறுமையில் வாடும் குடிசைப்பகுதி மக்களும் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் பழங்குடியினரும் இந்த கிருமித்தொற்றால் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கிருமித்தொற்று காரணமாக, லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரும் பொருளியல் நாடான பிரேசில் தற்போது பெரும் பொருளியல் சரிவில் சிக்கியுள்ளது.
அந்நாட்டுப் பொருளியல் இந்த ஆண்டில் 5 விழுக்காடு வரை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


