மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் புதிய தொற்று சம்பவங்கள் நேற்று மீண்டும் 100க்கும் மேல் பதிவானதை
யடுத்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் அவசரப்பட முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை முந்திய நாளன்று இரண்டு மாதங்களில் ஆகக் குறைவாக 94 என இருந்த நிலையில், நேற்று 114 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், விக்டோரியாவில் ஆறு வார கடுமையான முடக்க உத்தரவு நடப்பில் உள்ளது. கட்டுப்பாடுகள் படிப்படி
யாகத்தான் தளர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"94 அல்லது 114, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும் இயல்பு வாழக்கைக்கு திரும்ப அவசரப்பட கூடாது," என்றார் விக்டோரியா முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா தவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அண்டைநாடான நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்தார்.
ஆனால் பொது இடங்களில் ஒன்றுகூடுவது, நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்றவை ஆக்லாந்தில் நடப்பில் இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நல்ல பலனைத் தந்துள்ளதாக சொன்ன ஆர்டென், "கிருமிப் பரவலைக் களைவதில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சரியான பாதையில் இட்டுச் செல்கிறது," என்றார். நியூசிலாந்தில் நேற்று இரண்டு புதிய தொற்று சம்பவங்கள் பதிவாகின. இந்நிலையில், இன்று முதல் நியூசிலாந்து முழுவதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

