தோக்கியோ: ஜப்பான் பிரதமருக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளரும் தற்போதைய பிரதமர் ஷின்சோ அபேவின் வலதுகரமாக செயல்பட்டு வருபவருமான யோஷிஹைட் சுகாவும் அப்போட்டியில் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உடல்நலப் பிரச்சினையால், கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஜப்பானுக்கான அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் வரும் 13-15 ஆம் தேதிக்குள் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சுகா பிரதமராகும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சியினரின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள அபேவின் அமைச்சரவையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் சுகா, ஜப்பான் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து மீட்பதே தனது லட்சியம் எனக் கூறினார்.
அதேசமயம், "கட்சியின் தலைமை பதவிக்குப் போட்டியிடு
வதைப் பற்றி நான் யோசிக்கிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்," என்று சுகா கட்சியின் பொதுச்செயலாளர் தோஷிஹிரோ நிகாயிடம் சொன்னதாக டிவி டோக்கியோ செய்தி வெளியிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டில் அபேவால் முக்கிய பதவியான தலைமை அமைச்சரவை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுகா, அரசாங்கத்தின் உயர் செய்தித் தொடர்பாளராகவும் கொள்கைகள் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஃபியுமியோ கிஷிடா, முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஷிகெரு இஷிபாவும் ஏற்கெனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கின்றனர்.

