கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் வழக்கநிலைக்குத் திரும்பினால் பெருமளவிலான பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் நேற்று தெரிவித்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக பல கட்டுப்பாடுகளுக்கு ஆளாகி, சலிப்படைந்து வழக்கநிலைக்குத் திரும்ப பலர் விரும்புவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரேயேசுஸ் கூறினார்.
பொருளியல் மீட்புத் திட்டங்கள், சமுதாயங்கள் வழக்கநிலைக்குத் திரும்புவது ஆகியவற்றுக்கு உலகச் சுகாதார நிறுவனம் முழுமனதாக ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
"சிறுவர்கள் பள்ளிக்குத் திரும்புவதையும், பெரியவர்கள் வேலையிடங்களுக்குத் திரும்புவதையும் பார்க்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அவை பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும்," என்று டாக்டர் தேட்ரோஸ் கூறினார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவோரிடம் பேசி அவர்களுக்குப் புரியவைக்கும்படி அரசாங்கங்களை டாக்டர் தேட்ரோஸ் கேட்டுக்கொண்டார்.


