கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தமது புதிய கட்சி குறைந்தது 30 இடங்களில் வெற்றிபெறும் என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன்மூலம், அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக தமது கட்சி உருவெடுக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
அதேபோல, தமது முன்னாள் ஆதரவாளரான 27 வயது சையது சாதிக் எம்.பி. தொடங்கவிருக்கும் இளையர் கட்சியும் தேர்தலில் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறலாம் என அவர் கணித்துள்ளார்.
2023 செப்டம்பருக்குள் அடுத்த தேர்தலை நடத்த வேண்டும். ஆயினும், பிரதமர் முகைதீன் யாசின் இன்னும் சில மாதங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கடந்த மே 18ஆம் தேதி ஒரே ஒருநாள் மட்டும் இடம்பெற்ற நாடாளுமன்றக் கூட்டம் சட்டத்திற்குட்பட்டே கூட்டப்பட்டதால் அது செல்லுபடியாகும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

