கோலாலம்பூர்: மலேசியாவின் ஆகப் பழைய அரசியல் கட்சிகளுள் ஒன்றான மலேசிய இந்தியர் காங்கிரசுக்கு 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் இந்திய சமூகத்துக்கு உதவ அது பயன்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் எம். சரவணன் தெரிவித்து உள்ளார்.
மலேசியாவின் 'உத்துசான் மலேசியா' இணைய செய்தித்தாளின் ஞாயிறுப் பதிப்பான 'மிங்குவான் மலேசியா'வில் திரு சரவணனின் பேட்டி வெளியாகி உள்ளது. பெர்சத்து போன்ற புதிய கட்சிகளை உள்ளடக்கிய அரசியல் அமைப்புகள் மற்ற இனங்களுக்கு உதவிக்
கரம் நீட்ட முனைந்துள்ள வேளையில் சிறுபான்மை இந்தியரின் முன்னேற்றம் மீது மஇகா தொடர்ந்து கவனம் செலுத்திவருவது குறித்து மலேசிய மனிதவள அமைச்சருமான திரு சரவணன் விளக்கினார்.
"மஇகா என்பது தனிமனிதர் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அம்னோ, பாஸ் போன்ற கட்சிகளைப் போல மத்தியக் குழுவும் கிளைகள் மட்டத்திலான அமைப்பும் உள்ளன. இவற்றில் இந்திய சமூகத்துக்கு உதவ 1 பில்லியன் ரிங்கிட் சொத்துகள் உள்ளன.
"பட்டக்கல்வி வரை பயில நிதி உதவி வழங்குவதன் மூலம் மலேசிய இந்திய சமூகத்தை கல்வியில் சிறந்தோங்கச் செய்து முன்னேற்றுவதில் மஇகா கவனம் செலுத்து கிறது. ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்காத நிலையிலும் இந்திய சமூகத்தின் கல்விக்கு நிதி உதவி வழங்கும் ஒரே அரசியல் கட்சி மஇகா தான்," என்று திரு சரவணன் தெரிவித்ததாக அந்த இணையச் செய்தி குறிப்பிட்டது.
பிரதமரைவிட அதிக வருவாய்
மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணனின் மாத வருவாய் பிரதமர் முகைதீன் யாசினைவிட அதிகம். அதன்படி, இப்போதைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடியவராக சரவணன் கருதப்படுகிறார்.
ஆனால், இளம் வயதில் வறுமையிலிருந்து மீள தென்னை விவசாயத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததாகவும் இப்போதைய நிலைக்கு அதுவே அடித்தளம் என்றும் மலேசிய ஊடகத்திடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

